தெருவில் நிற்பது யார்? என்பது மக்களுக்கு தெரியும்

தெருவில் நிற்பது யார்? என்பது மக்களுக்கு தெரியும் என நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2022-04-29 17:04 GMT
தெருவில் நிற்பது யார்? என்பது மக்களுக்கு தெரியும் என நாராயணசாமிக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆழ்துளை கிணறு
மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கொடாத்தூர், மணவெளி, கைக்கிலப்பட்டு ஆகிய கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பொதுப்பணித்துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கைக்கிலப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையோரம் 2 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி  இன்று நடைபெற்றது. 
நிகழ்ச்சியில்     தொகுதி  எம்.எல்.ஏ.வும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் கலந்துகொண்டு, குடிநீர் திட்டத்தை தொடங்கிவைத்தார்.  மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தகுதி இல்லை
நாங்கள் நடுத்தெருவில் நிற்பதாக நாராயணசாமி குறை கூறுகிறார். 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்து விட்டு தேர்தலில் நிற்க திராணி இல்லாமல் பயந்து ஓடியவர்தான் அவர். அவருக்கு என்னைப் பற்றியோ, தீப்பாஞ்சானை பற்றியோ, மல்லாடியை பற்றியோ பேச எந்த தகுதியும் கிடையாது. நடுத்தெருவில் யார் நிற்கிறார்கள் என மக்களுக்கு தெரியும். 
புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் உறுதுணையாக உள்ளார். நாராயணசாமியால் செய்ய முடியாததை இந்த அரசு செய்வதால் அவர் எரிச்சலில் உள்ளார். அவருக்கு நாவடக்கம் தேவை. ‘பெஸ்ட்’ புதுச்சேரியை உருவாக்குவதே இந்த அரசின் நோக்கம்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

மேலும் செய்திகள்