நீண்ட காலம் வாழ உணவு கட்டுப்பாடு அவசியம் முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்

நீண்ட காலம் வாழ உணவு கட்டுப்பாடு அவசியம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

Update: 2022-04-29 15:00 GMT
புதுச்சேரி
நீண்ட காலம் வாழ உணவு கட்டுப்பாடு அவசியம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
புதுவை பழைய துறைமுக வளாகத்தில் சுகாதார திருவிழா  தொடங்கியது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

100 வயது வாழ்வது எப்படி?

எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்காக இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. சிலர் நிறைய செல்வம் இருந்தும் விரும்பியதை சாப்பிட முடியாமல் கஷ்டப்படுகின்றனர். சிலர் தங்கள் வாழ்நாளில் ஆஸ்பத்திரி பக்கமே செல்லாமல் உள்ளனர்.
அதேபோல் நானும் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் இருக்க விரும்பினேன். ஆனால் கொரோனா பாதித்ததால் அவ்வாறு இருக்க முடியவில்லை. நாம் எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கவேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் அதற்கு மருத்துவ வசதி தேவை. நமது மாநிலத்தில் சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன.
மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. அதற்கேற்ப நோய்களும் வருகின்றன. 100 வயதுக்கு மேற்பட்ட ஒருவரிடம் நான் நோயின்றி வாழ்வது எப்படி? என்று கேட்டேன். அவர் வேண்டுதல், வேண்டாமையை கடைபிடி என்றார். அதாவது நீண்ட காலம் வாழ உணவு கட்டுப்பாடு அவசியம்.
வளமான இந்தியாவை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணம். அதற்கு தகுந்தாற்போல் திட்டங்கள் தீட்டப்பட்டு அமல்படுத்தப்படுகின்றன.

அதிக கல்லூரிகள்

புதுவை மாநிலத்தில் மத்திய அரசு உதவியுடன் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் அறிவித்த திட்டங்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளோம். வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறோம். புதிய தொழிற்சாலைகள் வந்தால் இன்னும் வேலைவாய்ப்பு கிடைக்கும். 
இந்தியாவிலேயே அதிக அளவில் நமது மாநிலத்தில்தான் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதன் மூலம் 276 மாணவ, மாணவிகள் அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கின்றனர். அவர்களுக்கு சென்டாக் மூலம் கல்வி உதவித்தொகையும் வழங்குகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிப்மரில் கிடைக்கும் 15 இடத்தில்தான் புதுவை மாணவர்கள் டாக்டருக்கு படித்தார்கள்.

நம்பர்-1 புதுச்சேரி

கடந்த காலங்களில் சிகிச்சைக்காக சென்னை செல்வார்கள். அங்கு சென்றால் அதிக செலவு ஏற்படும். ஏழை மக்களால் அது முடியாத காரியம். ஆனால் இப்போது புதுவையிலேயே தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதுவையில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற முன்வர வேண்டும். புதுவையின் தனிநபர் வருமானம் உயர வேண்டும். அனைத்து துறைகளிலும் புதுச்சேரி நம்பர்-1 ஆக இருக்கவேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

மேலும் செய்திகள்