ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் அமைச்சர் தகவல்

10 ஆண்டுகளாக பராமரிக்காததே தீவிபத்துக்கு காரணம் என்றும், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-04-28 22:57 GMT
சென்னை,

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விபத்து தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.):- ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிந்ததும் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ மற்றும் புரட்சிபாரதம் எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி ஆகியோர் சென்று ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கு உணவும் வழங்கினார்கள்.

சபாநாயகர்:- இதையெல்லாம் இங்கு பதிவு செய்ய வேண்டுமா?, யார் யாரெல்லாம் சென்று உதவி செய்தார்கள் என்று சொல்ல வேண்டுமா?. அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசலாமே.

எடப்பாடி பழனிசாமி:- தீ விபத்து நடந்த பகுதியில் உதவி செய்ததை சொல்லக்கூடாதா?. நீங்களே இப்படி குறுக்கிட்டால் நாங்கள் எப்படி பேசுவது?. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூட தஞ்சாவூரில் நடந்த தீ விபத்து தொடர்பாக அங்கு செய்த உதவிகளை கூறினார். நான் இப்போது இன்னொரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்

தேர் திருவிழா விபத்தை 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மகாமகம் சம்பவத்தை ஒப்பிட்டு காங்கிரஸ் உறுப்பினர் இங்கே பேசுகிறார். செல்வபெருந்தகை ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு அ.தி.மு.க. மீது அவதூறாக பேசுகிறார். அவர் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறார். 2006-ம் ஆண்டு எங்கள் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்தபோது அவர் எம்.எல்.ஏ. ஆனார். எனவே அதையெல்லாம் நாங்கள் பேசலாமா?. எனவே இப்படி பேச அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். அவர் ஜெயலலிதா குறித்து பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:- கடந்த கால அ.தி.மு.க. ஆட்சிகளில் எங்கள் தலைவர் கருணாநிதியை பற்றி என்னவெல்லாம் பேசினீர்கள். கருணாநிதி கைது செய்யப்பட்டபோது என்னென்ன இந்த அவையிலே பதிவு செய்தீர்கள். அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர், ஜெயக்குமார், பா.வளர்மதி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் என்னென்ன பேசினார்கள் என்பது அவைக்குறிப்பில் இருக்கிறது.

சிறப்பு தீர்மானம் இனி இல்லை

ரொம்ப மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினீர்கள். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எங்கள் மூத்த தலைவர்கள் துரைமுருகன் உள்பட பலரும் வலியுறுத்தினோம். ஏன் பா.ம.க.வை சேர்ந்த ஜி.கே.மணியும் நீக்க கூறினார். ஆனால் இப்போது செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. மகாமகம் சம்பவம் தொடர்பாக பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க சொல்கிறார்கள். அவர் ஒன்றும் உங்களை போல் தவறாக சொல்லவில்லை. அவைக்குறிப்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதிவு செய்ததைதான் சொன்னார்.

சபாநாயகர்:-முடிந்து போன பிரச்சினையை விடுங்கள். சிறப்பு தீர்மானத்தை கூட அவை முன்னவர் வேண்டாம் என்று சொன்னார். எனவே விதி எண்-55, நேரமில்லா நேரத்தில் இனி உறுப்பினர்கள் பேசலாம்.

உறுப்பினர் செல்வபெருந்தகை:- நான் யாரையும் விரோதமாக பார்க்கவில்லை. அ.தி.மு.க. தலைவர்களுடன் உணவருந்தி இருக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் நல்ல நட்புடன் இருக்கிறேன்.

பெருந்தன்மையாக பேசுகிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- கடந்த காலங்களில் சட்டசபையில் நடைபெற்று இருக்கக்கூடிய, சட்டசபையில் பேசி இருக்கக்கூடிய சில விஷயங்களைத்தான் அமைச்சர் பொன்முடி பேசினார். அவை குறிப்பில் ஏற்கனவே இருக்கும் சில விஷயங்களைதான் அவர் பேசினார். ஆனால் முந்தைய காலங்களில் அதே விஷயங்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது கோரிக்கைகளை வைத்து இருக்கிறோம்.

அது குறித்து தலைவர் கருணாநிதியிடம் சொன்னபோது, இருக்கட்டும், அவர்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கவில்லை என்றால் பிரச்சினை இல்லை. அவர்களுக்கு என்ன தகுதி, நமக்கு என்ன தகுதி என்று நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுதான் என் கருத்தும். இந்த மன்றம் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும்.

இன்றைக்கு நடந்திருக்கக்கூடிய இந்த விவாதத்தில் கூட விவாதம் தேவையில்லை என்பதுதான் என் கருத்து. எனவே பேசியவர்கள் பெயர் இருக்கட்டும். அந்த வார்த்தைக்கு பதிலாக அவைக்கு ஒவ்வாத சொற்கள் என்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

சபாநாயகர்:- முதல்-அமைச்சரின் பேச்சு அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. நீங்கள் பெருந்தன்மையாக பேசி உள்ளீர்கள். அந்த அடிப்படையில் தவறான வார்த்தைகளை நான் பார்த்து நீக்கிவிடுகிறேன். உங்கள் கோரிக்கையை ஏற்று அதன்படி உள்ளே இருக்கும் கருத்துக்களையோ நீக்கிவிடுகிறேன்.

(முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் பொன்முடி பேசிய சிலவற்றை சபாநாயகர் நீக்கினார்)

ரூ.65 கோடியில் புதிய கட்டிடம்

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்புக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் துரிதமாக செயல்பட்டோம். அங்கிருந்த நோயாளிகளை துரிதமாக மீட்டோம். செய்தி சேகரிக்க வந்த ஊடகத்துறையினரும் மீட்பு பணியில் இறங்கினார்கள். ஆனால் தீயெல்லாம் அணைந்து 3 மணி நேரம் கழித்துதான் அ.தி.மு.க.வினர் சாப்பாடு வழங்கி உள்ளனர். இதை தான் எதிர்க்கட்சி தலைவர் எடுத்து சொல்கிறார்.

இந்த விஷயத்தில் அரசு மிக தீவிரமாக செயல்பட்டது. வேறு ஆட்சி இருந்து, வேறு முதல்-அமைச்சர் இருந்திருந்தால் 128 நோயாளிகளும் பலியாகி இருப்பார்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கியதால் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடங்களை கருணாநிதிதான் கட்டினார். நீங்கள் (அ.தி.மு.க.) வெள்ளை அடித்து திறந்து வைத்திருக்கிறீர்கள். அந்த கட்டிடத்தை நீங்கள் கட்டியதாக கூறுவது தவறானது.

அரசு ஆஸ்பத்திரிக்கு ராஜீவ்காந்தி பெயரை சூட்டியதும் நாங்கள்தான். தீப்பிடித்து சேதம் அடைந்த நரம்பியல் துறை கட்டிடம் 105 வருட பழைய கட்டிடமாகும். 10 வருடமாக ஆட்சியில் இருந்த நீங்கள் ஏன் அதை பராமரிக்கவில்லை. இதுதான் இந்த தீ விபத்துக்கு காரணமாகும். இப்போது அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்