மீனவர் வீட்டில் 27 பவுன் நகைகள் திருட்டு
வீராம்பட்டினத்தில் மீனவர் வீட்டில் 27 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீராம்பட்டினத்தில் மீனவர் வீட்டில் 27 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மீனவர்
புதுச்சேரி அருகே வீராம்பட்டினம் வடக்கு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 40). மீனவர். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர். தற்போது சிங்கப்பூரில் ஞானசேகரன் வேலை செய்து வருகிறார். எனவே லாவண்யா தனது பிள்ளைகளுடன் மாமனார், மாமியாருடன் ஒன்றாக வசித்து வருகிறார். கணவர் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்பும் பணத்தில் வாங்கிய நகைகளை லாவண்யா மரக்காணம் அருகே கூனிமேடு கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கொடுத்து வைத்திருந்தார்.
27 பவுன் நகைகள்
இந்தநிலையில் வீட்டுமனை வாங்குவதற்காக தனது பெற்றோர் வீட்டில் வைத்திருந்த 27 பவுன் நகைகளை வீராம்பட்டினத்தில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு வந்து பீரோவில் வைத்து இருந்தார்.
சம்பவத்தன்று நகைகளை அடகு வைப்பதற்காக லாவண்யா பீரோவை திறந்தபோது அதில் வைத்திருந்த 27 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
பீரோவிலேயே சாவி தொங்கிக் கொண்டிருந்த நிலையில் அதை பயன்படுத்தி யாரோ அந்த நகைகளை திருடிக் கொண்டு சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து லாவண்யா புகார் அளித்ததன்பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக லாவண்யா வீட்டுக்கு வந்து சென்ற உறவினர்கள், மீன் வியாபாரிகள் பற்றிய விவரங்களை சேகரித்து நகைகள் திருட்டு போனது குறித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.