8 ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 200% உயர்த்தியது - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

8 ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 200% உயர்த்தியது என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

Update: 2022-04-28 07:32 GMT
கோப்புப் படம்
சென்னை,

நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து பிரதமர் மோடி, நேற்று அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநில அரசுகள் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும். பொருளாதார முடிவுகளில் மத்திய, மாநில அரசுகள் இடையேயான ஒத்துழைப்பு மிக அவசியம் என்று கூறினார். இதற்கு பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழக அரசும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிக அளவில் உயர்த்தியது மத்திய அரசுதான். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி 7 மடங்கு அதிகரித்துள்ளது. 

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெட்ரோல் மீதான வரியை ரூ.3 குறைத்தார். கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரியை  மத்திய அரசு 200 சதவீதம் உயர்த்தியது. திமுக அரசு ஆட்சியில் இருந்தபோதெல்லாம் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வரி விகிதத்தை 2014-ம் ஆண்டில் இருந்தது போல் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்