உழவர் நலத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-04-28 05:26 GMT
சென்னை,

உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை அவர் திறந்து வைத்தார். 

2021-22-ம் நிதியாண்டின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் கிருஷ்ணகிரியில் புதிய தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

அதே போல நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூர், சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு, கரூர் ஆகிய மூன்று இடங்களில் புதிய வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களையும் முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார். 

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் வேளாண்மை மற்றும் இளம் அறிவியல் தோட்டக்கலை ஆகிய பட்டப்படிப்புகளில் இந்த கல்வி ஆண்டு முதல் தமிழ்வழிக்கல்வி பாடத்திட்டம் மற்றும் திருச்சி குமுலூரில் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு ஆகிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில், செங்கல்பட்டு மறைமலை நகரில் ரூ.5.85 கோடியில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், கோயம்பேட்டில் ரூ.2.67 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்