4 அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

4 அரசு சட்டக்கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும் என சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார்.

Update: 2022-04-27 20:52 GMT
சென்னை,

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, புதுப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரிகளில் கூடுதலாக முதுநிலை (எல்.எல்.எம்.) பட்டப்படிப்பு பிரிவுகள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, பட்டறைப்பெரும்புதூரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்பட்டப்படிப்பு அல்லது 3 ஆண்டு சட்டப்பட்டப்படிப்பு முடித்த 17 பட்டதாரிகளுக்கென தலைமைச்செயலக சட்டத்துறையில் தன்னார்வ பயிற்சித்திட்டம் தொடங்கப்படும்.

ரூ.20 ஆயிரம் உதவித்தொகை

இதற்கென, ஒரு சட்ட பட்டதாரிக்கு ஒரு மாதத்துக்கு உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் வீதம் 17 சட்டப் பட்டதாரிகளுக்கு ஒரு வருடத்துக்கு ரூ.40.80 லட்சம் செலவு ஆகும்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஆகிய இடங்களில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவால் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகளை பிரத்யேகமாக விசாரணை செய்ய ஒரு கூடுதல் நீதிமன்றம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.

மரணமடைந்த வக்கீல்களின் வாரிசுதாரர்கள், நியமனதாரர்களுக்கு நலநிதி வழங்குவதற்காக, தமிழ்நாடு வக்கீல்கள் நலநிதிக்கு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் மானியத்தை ரூ.8 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து சிறைகள், சிறைத்துறை துணைத்தலைவர் மற்றும் தலைமை நன்னடத்தைக் கண்காணிப்பாளர் ஆகியோரின் அலுவலகங்களுக்கு 63 கணினிகள், 45 புள்ளி அணி அச்சு எந்திரங்கள், 18 லேசர் அச்சு எந்திரங்கள் மற்றும் 21 நகலெடுக்கும் எந்திரங்கள் ரூ.82.92 லட்சம் தொடரா செலவினத்தில் புதியதாக கொள்முதல் செய்து நவீனமயமாக்கப்படும்.

மதிப்பூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு

அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் பணிபுரியும், 24 மனநல ஆலோசகர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.15 ஆயிரம் மதிப்பூதியத்தை, ரூ.25 ஆயிரமாக ஆண்டுக்கு ரூ.28.80 லட்சம் தொடர் செலவினத்தில் உயர்த்தி வழங்கப்படும்.

பொங்கல் பண்டிகை, குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களில் சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு உணவுக்காக செலவிடப்படும் தற்போதைய தொகையான ரூ.50-ஐ ரூ.100 ஆக ஆண்டுக்கு ரூ.39 லட்சம் தொடர் செலவினத்தில் உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்