அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை கட்டுப்பாட்டில் எடுத்த அறநிலையத்துறை உத்தரவு ரத்து

அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை கட்டுப்பாட்டில் எடுத்த அறநிலையத்துறை உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும் சட்டப்படி புதிய நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

Update: 2022-04-27 20:48 GMT
சென்னை,

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பின் சார்பில் அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கு சாமி சிலைகள் வைத்து பூஜிக்கப்படுவதாகவும், பக்தர்களிடம் காணிக்கை பெறுவதாகவும், நிதி வசூலில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அரசுக்கு புகார்கள் வந்தன. அதையடுத்து இந்த அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கடந்த 2014-ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. தக்காரையும் நியமித்தது.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பு 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்த தனி நீதிபதி, சம்பந்தப்பட்ட அமைப்பை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.

கண்டனம்

அந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை கையகப்படுத்திய அறநிலையத்துறை உத்தரவையும், தனி நீதிபதி உத்தரவையும் ரத்து செய்யப்போவதாக அறிவித்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மனுதாரர் சார்பில் வக்கீல் சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

உத்தரவு ரத்து

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

அயோத்தியா மண்டபம் கோவில் என்பதற்கான எந்தவொரு தீர்க்கமான ஆதாரங்களும் இல்லாமல் தக்காரை அறநிலையத்துறை நியமித்துள்ளது. எனவே இதுதொடர்பாக அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். தனி நீதிபதியின் உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. அயோத்தியா மண்டபத்தை மீண்டும் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பிடமே ஒப்படைக்க வேண்டும். அதேநேரம் ஸ்ரீராம் சமாஜ் அமைப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் முறைப்படி நோட்டீஸ் பிறப்பித்து சட்டத்துக்குட்பட்டு புதிதாக விசாரணை நடத்தலாம். அதன்படி நடவடிக்கையும் எடுக்கலாம்.

நிரூபிக்கவில்லை

ஏனெனில் சங்கங்களின் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீராம் சமாஜ் அமைப்பை கோவில் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியாது. 2004-ம் ஆண்டு இந்த மடத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2014-ம் ஆண்டு அதே புகார்தாரர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலைகள் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறுவதை அறநிலையத்துறை நிரூபிக்கவில்லை. எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்