கோவையில் பரபரப்பு: கோஷ்டி மோதலில் கத்திகுத்து - ஒருவர் பலி..!
கோவை அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை:
கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 34), சுரேஷ் (28), வசந்த் (32), பிரகாஷ் (32), தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (23), சூர்யா (28), சுரேஷ் (29), சுபாஷ் (23), பாஸ்கரன் (23) தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சந்தோஷ் தரப்பினர் உக்கடம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்து வழிமறித்த முத்துப்பாண்டி தரப்பினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அது கைகலப்பாக மாறிய நிலையில் முத்துப்பாண்டி தரப்பினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷ் மற்றும் சுரேஷ் வயிற்றில் குத்தி உள்ளனர். இதை பார்த்த வசந்த், பாஸ்கரன் அங்கிருந்து ஓடியுள்ளனர்.
இதையடுத்து முத்துப்பாண்டி தரப்பினர் அங்கிருந்து தப்பிய நிலையில், சந்தோஷம் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஆபத்தான நிலையில், சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.