சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து...!
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை சென்ட்ரல் பகுதியில் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நோய், விபத்து என உடல்நலக்குறைக்கு உள்ளான நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கான வருகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளி, புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகளும் இங்கு உள்ளது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கல்லீரல் சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சில நோயாளிகள் சிக்கிக்கொண்டனர்.
தீ மளமளவென பரவத்தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, தீ விபத்தால் கல்லீரல் சிகிச்சை பிரிவில் சிக்கிக்கொண்டிருந்த நோயாளிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீ விபத்து ஏற்பட்ட வளாகத்தில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு சிலிண்டர் வெடித்தது. இதனால், ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மருத்துவமனையில் பற்றிய தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.