தென்காசி மாவட்டம் கடையத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலைக்கல்லூரி

தென்காசி மாவட்டம் கடையத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலைக்கல்லூரி அமைச்சர் சேகர்பாபு தகவல்.

Update: 2022-04-26 21:09 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், ‘கடையம் பகுதியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கலைக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா? என்று கேள்வி கேட்டார்.

அதற்கு அந்தத்துறையின் அமைச்சர் சேகர்பாபு அளித்த பதில் வருமாறு:-

இந்த சட்டசபையில் 100-வது கேள்வியும், முதல் குறுகிய கால கேள்வியும் இந்துசமய அறநிலைய துறைக்கு வந்திருப்பதால், இறைவனின் அருள் முழுவதுமாக இந்த ஆட்சிக்கு உள்ளது என்பதை உணர்த்துகிறது.

அந்தக்கல்லூரி, குற்றாலநாதசுவாமி திருக்கோவில் சார்பாக நடத்தப்பட வேண்டி, பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7.60 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. நல்லெண்ணம் கொண்டோர், கோர்ட்டுக்கு சென்றிருப்பதால் அதில் தடை ஏற்பட்டுள்ளது.

கோர்ட்டின் தீர்ப்பை பெற்று அதன் வழிகாட்டுதலோடு அந்த கல்லூரியை அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். அந்த கோவிலுக்கான அறங்காவலர்களை நியமித்து கோர்ட்டில் தெரிவித்தால் இந்த ஆண்டே கல்லூரியை தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக உறுப்பினர் கூறினார்.

அந்த கோவிலில் இரண்டு வகையான அறங்காவலர்களை நியமிக்க வேண்டியுள்ளது. இதுசம்பந்தமாக கடந்த மாதம் 3 முறை கூட்டம் கூட்டியுள்ளோம்.

அதுபோல இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 10 கல்லூரிகளில் முதற்கட்டமாக அறங்காவலர்களை நியமிக்கிற பணியை விரைவுபடுத்தி இருக்கிறோம். கோர்ட்டு உத்தரவின்படி இந்த கல்லூரிகள் அமையும். கடந்த காலங்களில் ஏற்பட்ட தொய்வை தற்போதுதான் படிப்படியாக சரி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்