விளைபொருட்கள் கொள்முதல் சட்டங்களில் மாற்றம் தேவை

விவசாயிகள் பயன் பெறும் வகையில் விளைபொருட்கள் கொள் முதல் சட்டங்களில் மாற்றங்கள் செய்யவேண்டும் என்று விவசாயிகள் திருவிழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசினார்.

Update: 2022-04-26 17:12 GMT
விவசாயிகள்     பயன் பெறும் வகையில் விளைபொருட்கள்     கொள் முதல் சட்டங்களில் மாற்றங்கள் செய்யவேண்டும் என்று விவசாயிகள் திருவிழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசினார்.
விவசாயிகள் திருவிழா
மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏப்ரல் மாதம் 25 முதல் 30-ந் தேதி வரை பல்வேறு துறை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள 731 வேளாண் அறிவியல் நிலையங்களில் விவசாயிகள் திருவிழா நடத்தப்படுகிறது. 
அதன்படி புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் திருவிழா தொடங்கியது. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் பாலகாந்தி தலைமை தாங்கினார். விழாவை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் சாய் சரவணன் குமார் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது:-
கொள்முதல் சட்டங்கள்
விவசாயிகளின் மாறுபட்ட நலனை காப்பதற்காகவும், அவர்களின் உதவிக்காகவும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது. தற்போது விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. விவசாயிகள் நிம்மதியாக வாழ முடியவில்லை. விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலைக்கு விற்க முடியவில்லை. அரசு நிர்ணயித்த விலையை விட குறைவாகவே விற்கும் சூழ்நிலை உள்ளது. 
இதுகுறித்து புதுவைக்கு வந்திருந்த உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் கூறியிருந்தேன். மத்திய அரசின் விளைபொருள் கொள்முதல் சட்டங்கள் விவசாயிகளை வாழ விடுவதில்லை. விவசாயிகளுக்கு   சாதகமாக, கொள் முதல் சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினேன்.
விவசாய தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. எனவே விவசாயத்தை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பதற்கு இடுபொருட்கள் வேளாண்துறை சார்பில் வழங்கப்படும். 
இவ்வாறு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசினார்.
அமைச்சர் சாய் சரவணன்குமார்
அமைச்சர் சாய் சரவணன்குமார் பேசுகையில், இதுவரை புதுச்சேரியில் பார்த் திராத     விவசாயிகள்  திரு விழாவை தற்போது நான் கண்டுள்ளேன். பிரதமர் மோடி, விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறி வருகிறார். இயற்கை சீற்றங்களின்போது முதலாவதாக பாதிப்பது விவசாயிகள்தான். நாட்டின் 100-ல் 50 சதவீத வருமானம் விவசாயத்தை சார்ந்துதான் வருகிறது. இந்த  விவசாய திருவிழா ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்றார்.
விழாவில் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன், காரைக்கால் ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ், புதுச்சேரி வேளாண் தொழில்நுட்ப முகமையின் திட்ட இயக்குனர் வசந்தகுமார், கால்நடை கல்லூரி முதல்வர் முருகவேல், பூச்சியியல் வல்லுனர் விஜயகுமார்   ஆகியோர் கலந்துகொண்டனர்.
கண்காட்சி
விவசாயிகள் திருவிழாவின் ஒரு பகுதியாக கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் உயர்ரக பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொடர்பான இடுபொருட்கள், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் விவசாயிகள், மகளிர் உதவிக்குழுக்களின் மதிப்புக்கூட்டப்பட்ட           விளை பொருட்கள் இடம்பெற்றி ருந்தன. மேலும் காய்கறி, பழங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு பயிற்சி பெற்ற கிராமப்புற பெண்கள் சிறுதொழில் செய்வதற்காக ரூ.3 ஆயிரம் மதிப்பிலான எடை எந்திரம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்