கனடா தொழில் அதிபரிடம் தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி ரூ.1½ கோடி நூதன மோசடி

2 வது திருமணத்திற்க்கு பெண் பார்த்தவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1½ கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-26 10:25 GMT
சென்னை:

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் 2-வது திருமணத்துக்கு பச்சையப்பன் பெண் பார்த்து வந்துள்ளார். இதற்காக மேட்ரி மோனியில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார்.
 
கனடாவில் தொழில் செய்து வரும் பச்சையப்பன் விதவைப்பெண் வேண்டும் என்று செய்திருந்த விளம்பரத்தை பார்த்து பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவை சேர்ந்த செந்தில் பிரகாஷ் (42) என்ற வாலிபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் தனது தங்கை ராஜேஸ்வரிக்கு பெண் பார்த்து வருவதாகவும், அவருக்கு உங்களை மிகவும் பிடித்துள்ளது என்றும் கூறி உள்ளார். மேலும் தன் தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.1 கோடியே 35 லட்சத்து 25 ஆயிரத்து 925-ஐ செந்தில் பிரகாஷ் பெற்று மோசடி செய்துள்ளார்.

இந்தநிலையில் கனடாவில் இருந்து சென்னை வந்த பச்சையப்பன் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். அப்போது பச்சையப்பன், செந்தில் பிரகாசுக்கு போன் செய்து தங்கைக்கு பரிசு பொருட்கள் வாங்கி வந்துள்ளதாகவும், அதனை வாங்கி கொள்ள வருமாறும் கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து ஓட்டலுக்கு சென்ற செந்தில் பிரகாஷ் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 903 மதிப்பிலான பரிசு பொருட்களை பறித்துக்கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி ராயப்பேட்டை போலீசில் பச்சையப்பன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் செந்தில் பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்