"தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை" - பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் உரை

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை உதகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-25 11:41 GMT
நீலகிரி,

புதிய உலகை கட்டமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு என்ற தலைப்பில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான 2 நாள் மாநாடு நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் தொடங்கியது. உதகையில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய, மாநில பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் தொடக்க உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை என்றும் பல்கலைக்கழகங்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் மாணவர்களின் வேலைவாய்ப்பை பெருக்கக்கூடிய கல்விமுறையை துணைவேந்தர்கள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்ட திருத்தம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்