பனங்கருப்பட்டிகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - பனை தொழிலாளர்கள் கோரிக்கை...!
வேடசந்தூர் பகுதியில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டிகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் என்று பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர், நல்லூர், கரட்டுச்சாலையூர், பழையதோப்பூர், சுக்காம்படடி, நடுத்தோப்பூர், களத்தூர், ஆர்.கோம்பை மற்றும் அதனைச்சுற்றியுள்ள 15-க்கும் மேற்ப்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு பதநீர் இறக்கி, பனங்கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் 300-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் ஜீலை மாதம் வரை பனை மரத்தில் இருந்து சேகரிக்கும் பதநீரை, கொப்பரையில் காய்ச்சி, அதை கொட்டாங்குச்சியில் ஊற்றி பனங்கருப்பட்டியாக தொழிலாளர்கள் தயாரிக்கின்றார்கள்.
இத்தகைய கருப்பட்டிகள் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.450 வரை விற்றது. இந்த ஆண்டு ரூ.350 விலை குறைந்து உள்ளது. நிலையான விலை இல்லாததால் பனை தொழிலாளர்கள் வாழ்வாதம் பாதிக்கப்பட்டு வருகினறது என்ற தொழிலார்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து பனை தொழிலாளி ஒருவர் கூறுகையில்,
கடந்த 1983-ம் ஆண்டு கோவிலூர் அருகே உள்ள சுக்காம்பட்டியில் தமிழக அரசின் சார்பில் பனங்கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த சம்மேளனம் தொடங்கிய சில வருடங்களிலேயே பூட்டப்பட்டது.
இதனால் வேறுவழியின்றி தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டியை தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யவேண்டிய நிலையில் உள்ளோம்.
பூட்டப்பட்டுள்ள பனங்கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்து பனைத்தொழிலாளர்களிடம் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.