முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி சமூக வலைதளத்தில் வைரல்
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி கிடந்ததாக கூறப் படுகிறது. . இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
புதுச்சேரி
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில தலைவர் ஸ்ரீதர் உள்பட பலரை போலீசார் கைது செய்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் தங்கவைத்தனர். இவர்களுக்கு மதியம் 2 மணியளவில் ஓட்டலில் இருந்து வாங்கி வந்த உணவு வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீதருக்கு வழங்கிய உணவு பொட்டலத்தை பிரித்து அவர் சாப்பிட்டார். அப்போது அதில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப் படுகிறது.
இதனை பார்த்த உடன் அதிர்ச்சியடைந்த அவர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மற்றவர்களும் போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பின்னர், ஸ்ரீதரை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.