தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு
முத்தியால்பேட்டையில் தனியார் நிறுவன பெண் ஊழியர் வீட்டில் 18 பவுன் நகையை திருடிச்சென்றது தொடர்பாக ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தியால்பேட்டையில் தனியார் நிறுவன பெண் ஊழியர் வீட்டில் 18 பவுன் நகையை திருடிச்சென்றது தொடர்பாக ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை திருட்டு
முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி அனிதா (வயது 38). சேதராப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று அனிதா தனது 18 பவுன் நகைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து பீரோவில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். பீரோ சாவியை வீட்டில் மறைவான இடத்தில் வைத்திருந்தார்.
வேலை முடிந்த வீடு திரும்பி வந்து பார்த்தபோது நகை வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பா கீழே கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அதனை எடுத்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த நகைகளை காணவில்லை. பீரோ சாவி இருக்கும் இடத்தை நன்கு தெரிந்த நபர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து அனிதா முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பெண் ஒருவர் அனிதாவின் வீட்டிற்குள் சென்று வருவது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.