வார இறுதி விடுமுறை; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் குவிந்ததால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீலகிரி,
கோடை சீசன் தொடங்கியுள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஊட்டி மலை ரெயிலில் பயணித்து இயற்கை காட்சிகள், தேயிலை தோட்டங்கள், மலை முகடுகளை ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது ஊட்டியில் நடந்து வரும் குதிரைப் பந்தயத்தில் சீறீப்பாய்ந்து வரும் குதிரைகளை கண்டு களிக்கவும் கூட்டம் குவிகிறது. முதுமலை யானைகள் முகாமில் உள்ள யானைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால், ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் ஊட்டி சாலைகளில் ஆங்காங்கே இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டது.