மக்கள் தேர்வு செய்த முதல்-அமைச்சரை பதவி விலக சொல்வதா? அண்ணாமலைக்கு திருநாவுக்கரசர் எம்.பி. கண்டனம்
ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசுகிறார்.
அவர் தனது பேட்டியில், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டு வரும் தொடர் தோல்விகள் குறித்தும், ஒரு கட்சியின் எதிர்காலத்தை தேர்தல் வெற்றி, தோல்விகளை வைத்து முடிவு செய்யக்கூடாது என்றும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கட்டமைப்பை கொண்ட ஒரே கட்சியாக காங்கிரஸ் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இணைவதால் கட்சிக்கு என்ன பலன்? அவருக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பது குறித்து கட்சி தலைமையும் பிரசாந்த் கிஷோரும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொல்வது குறித்து பேசுகையில், மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத ஒருவர், மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதல்-அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்வது தவறு. அதிகாரம் அவர்கள் கையில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. விவகாரம் குறித்து பேசுகையில், சசிகலாவால் அ.தி.மு.க.வுக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும், எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. தற்போது வலுவான எதிர்க்கட்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மோடியை பாராட்டிய இளையராஜா விவகாரம் உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு விளக்கமாக திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.