மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய எந்த நிதியும் வந்து சேர்வது இல்லை- கனிமொழி

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய எந்த நிதியும் வந்து சேர்வது இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2022-04-23 19:20 GMT
மணமக்களுக்கு வாழ்த்து

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன்-பாரதி சுரேஷ்ராஜன் ஆகியோரின் மகன் நீல தமிழரசன்- சஞ்சனா பகவதி ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடந்தது. இதையொட்டி தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் இல்லத்துக்கு வருகை தந்து புதுமண தம்பதியை நேரில் வாழ்த்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரானது அல்ல

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் பெண்களுக்கான கல்வி திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு எதிரானது என்று தவறான, பிற்போக்கான ஒரு விஷயத்தை பரப்பிக்கொண்டு வருகிறார்கள். பெண்கள் கல்வி என்ற ஆயுதத்தோடு நிற்கக் கூடியவர்களாக உருவாக்குவதற்காக இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் உயர்கல்விக்கு போகக்கூடிய மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டமாக இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அதில் எந்தவித மாறுபாடும் கிடையாது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி. வரி நிதியை இன்னும் வழங்காமல் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் ஏற்படும்போது தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈடு மற்றும் நிவாரண நிதியையும் வழங்காமல் இருக்கிறார்கள்.

எந்த நிதியும் வருவதில்லை

அடிப்படையாக தமிழகத்துக்கு வர வேண்டிய எந்த நிதியுமே தமிழகத்துக்கு வந்து சேர்வது இல்லை. இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

மேலும் செய்திகள்