மின்வெட்டுப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தேவையான நிலக்கரியை பெற விரைந்து நடவடிக்கை எடுத்து மின்வெட்டுப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2022-04-23 15:39 GMT
கோப்புப் படம்
சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் ஆங்காங்கே அடிக்கடி மின் வெட்டு இருந்ததையடுத்து, கடந்த 18-04-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதுகுறித்து உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள். எரிசக்தித் துறை அமைச்சரும் தனது பதிலை அளித்தார்கள்.

இந்த விவாதம் முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், 20-04-2022 தமிழ்நாட்டில் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதாகவும், திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே மின்சார விநியோகம் தடைபட்டு வந்த நிலையில், 20-04-2022 அன்று இரவு மின்வெட்டு ஏற்பட்டதாகவும், இதில் அப்பகுதி மக்களுக்கும், மின்சார ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மின்வாரிய அலுவலகமே சூறையாடப்பட்டதாகவும், மின்சார ஊழியர் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. 21-04-2022 அன்று இரவு கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு அனகாபத்தூர், பம்மல், தாம்பரம் போன்ற பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 21-04-2022 அன்று இரவு திருவண்ணாமலை அடுத்த சோபாசிபாடி கிராமத்தில் மின் தடை ஏற்பட்டதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆரணியில் மின் வாரிய அலுவலகத்தின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

இதற்கு பதிலளிக்கும் வகையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தூத்துக்குடியில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளதாகவும், 420 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகவும். மத்திய அரசு சரியான முறையில் நிலக்கரி வழங்காததன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக  அமைச்சர் கூறியுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இந்த நிலையில், 18-02-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய  அமைச்சர்  தமிழகத்தில் தற்போது வரை மின் தடை இல்லை என்றும், எந்தக் காலத்திலும் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பேசியிருக்கிறார். பேசி முடித்த இரண்டாவது நாளே மின்வெட்டு ஏற்பட்டு, அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முடிந்து இருக்கிறது. அப்படியென்றால், கள யதார்த்தம் தெரியாமல்  அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பதில் அளித்து இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

நிலக்கரி பிரச்சினை என்பது சென்ற ஆண்டிலிருந்தே இருந்து வருகிற ஒன்றாகும். இதுகுறித்து நான்கூட அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அப்பொழுதே, கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்தி நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், மின் வெட்டு வந்தவுடன், நிலக்கரி பற்றாக்குறையைப் போக்க 4.80 லட்சம் டன் இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறுகிறார். எப்போது ஒப்பந்தப்புள்ளி முடிந்து, எப்போது நிலக்கரி தமிழ்நாட்டின் அனல் மின் நிலையங்களை வந்தடைவது? அதுவரை மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட வேண்டுமென்று கூறுகிறாரா அமைச்சர்? நிலைமை மோசமடைந்த நிலையில் முதல்-அமைச்சர் பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் நிலக்கரி வரத்து குறைவாக இருப்பதாகவும், நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், ரெயில் பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக நிலக்கரியை எடுத்துவர இயலவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். இதிலிருந்து, கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற நிலையில் தி.மு.க. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. தி.மு.க. அரசின் நடவடிக்கை கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கு கண்டனத்திற்குரியது. இந்த நிலையில், நிலைமை சரி செய்யப்பட்டு விட்டதாக அமைச்சர் நேற்று விளக்கம் அளித்து இருக்கிறார். இதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மின் வெட்டினால் தி.மு.க. ஆட்சியே பறிபோனது என்பதையெல்லாம் முதல்-அமைச்சர் நன்கு அறிவார். எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு மின்வெட்டுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும், தேவையான நிலக்கரியை விரைந்து பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்