தமிழகத்தில் இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். கடுமையான மின்வெட்டு குறித்து சமூகவலைதளத்தில் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இதற்கிடையில், மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வரவேண்டிய 750 மெகாவாட் மின்சாரம் திடீரென தடைப்பட்டதால் மின் விநியோகம் தடைபட்டதாக மின்சாரத்துறை மந்திரி செந்தில்பாலாஜி கடந்த 20-ம் தேதி இரவு தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மாலை (ஏப்.23) முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 796 மெகாவாட் மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.