பொதுஇடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வேண்டுகோள்
பொதுஇடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி
பொதுஇடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முககவசம் கட்டாயம்
புதுவையில் கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்த ஒத்துழைப்பு நல்கிய புதுச்சேரி மக்களுக்கு சுகாதாரத்துறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. பிற மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், தற்போது புதுச்சேரியில் கொரோனா இல்லாத நிலை நிலை நிலவுகிறது. இது தொடர்வதற்கு பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்கவும், அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மிக முக்கிய காரணியான கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் போடப்படுகிறது. இந்த தடுப்பூசி முதல் மற்றும் 2-வது தவணைகளுக்கும் உள்ள இடைவெளி 84 நாட்கள் அல்லது 3 மாதம் ஆகும்.
தடுப்பூசி
2-வது தவணைக்கு பிறகு 9 மாதங்கள் கழித்து முன்கள பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. ஆகவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசி எடுக்காமல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று செலுத்திக்கொள்ள வேண்டும்.
15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் தடுப்பூசி 2 தவணைகளாக 28 நாள் இடைவெளியில் செலுத்தப்படுகிறது. அதேபோல் 12 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி முதல் மட்டும் 2-வது தவணைகள் 28 நாள் இடைவெளியில் செலுத்தப்படுகிறது.
4-வது அலை
இவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் கொரோனா நோய்த்தொற்று 4-ம் அலை வந்தாலும் அதன் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் மேற்கூறிய அனைத்தையும் கடைபிடிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.