மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்திற்கு முதல் அமைச்சர் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சென்னை,
மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த எஸ்ஐ நாட்ராயன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வடக்கிப்பாளையத்தில் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய நாட்ராயன் மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 19-ந்தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த செய்தியை அறிந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் முதல் அமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.