இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால் தோழியுடன் மாயமான 8-ம் வகுப்பு மாணவி..!
இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால் தோழியுடன் மாயமான 8-ம் வகுப்பு மாணவியை சென்னையில் போலீசார் மீட்டனர்.
கோவை:
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த தம்பதியின் 14 வயது மகள் கோவையில் உள்ள ஒரு தனியார்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனது செல்போனில் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து வைத்து இருந்தார்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் இன்ஸ்டாகிராம் செயலியில் சென்று போட்டோக்கள் மற்றும் தகவல்களை பார்த்து வந்து உள்ளார். இதை கடந்த 20-ந் தேதி இரவு மாணவியின் தந்தை பார்த்து, மகளை கண்டித்தார். ஆனால் அந்த மாணவி மனமுடைந்து காணப்பட்டு உள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் மாணவியின் தந்தை தனது மகளை வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு கொண்டு சென்று விட்டார். பின்னர் மாலை 3.30 மணியளவில் மீண்டும் மகளை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் பள்ளியில் இல்லை.
இதற்கிடையே அதே பள்ளியில் படிக்கும் சாய்பாபாகாலனியை சேர்ந்த மற்றொரு மாணவியும் மாயமானது தெரியவந்தது. 2 மாணவிகளின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடி வந்தனர்.
விசாரணையில், மாணவிகள் இருவரும் தோழிகள் என்பதும், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதை தந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தனது தோழியுடன் பள்ளியில் இருந்து வெளியேறி ரெயிலில் சென்னை சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கோவை போலீசார் சென்னை போலீசாரை தொடர்புகொண்டு பேசி, சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர். பின்னர் அவர்கள் கோவை அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.