ராணிப்பேட்டை: திருடர்களை துரத்தி சென்ற சமையல் மாஸ்டர் அடித்து கொலை...!
ராணிப்பேட்டை அருகே திருடர்களை துரத்தி சென்ற சமையல் மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.
ஆற்காடு,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமசாமி தெருவை சேர்ந்தவர் திருமால் (வயது 54). இவர் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர்.
திருமால் நேற்று இரவு குடும்பத்தினருடன் இரவு உணவை முடித்து விட்டு வீட்டில் தூங்கி உள்ளார். அப்போது இவர் வீட்டின் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் டேங்க் அருகே சத்தம் கேட்டு உள்ளது.
இதனால் தூக்கத்திலிருந்து எழுந்த திருமால் வெளியில் என்ன நடக்கிறது என்று பார்த்துள்ளார். அப்போது சில மர்ம நபர்கள் தண்ணீர் டேங்க் பகுதில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு பைப்களை திருட முயன்று உள்ளனர்.
இதை கண்ட திருமால் வீட்டிற்கு வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார். மேலும் அங்கிருந்து திருடி கொண்டு ஓடிய மர்மநபர்களை துரத்திச் சென்று உள்ளார்.
அப்போது சமையல் மாஸ்டர் திருமலை தாங்கள் வைத்திருந்த இரும்பு பைப்பால் தலை மற்றும் உடல் மீது சரமாரியாக கொள்ளையர்கள் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த திருமால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.