மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி தொகை ரொக்கமாக வழங்கப்படும் முதல்-அமைச்சர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி தொகை முழுவதும் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-04-22 00:16 GMT
சென்னை,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 24 பள்ளிகள், நிறுவனங்களின் கட்டிடங்கள் ரூ.2 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும். தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் பி.காம்., பி.சி.ஏ. பாடங்கள் ரூ.18.06 லட்சம் செலவில் அறிமுகம் செய்யப்படும்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதில் சேவையை பெறுவதற்காக சென்னை மாவட்டத்தில் ரூ.1.51 கோடி செலவில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும்.

ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சுயதொழில் கடன் உதவி திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் ரூ.25 ஆயிரம் தொகையினை அறிவுசார் குறைபாடுடையோர், புற உலக சிந்தனையற்றோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து 400 பயனாளிகளுக்கு வழங்கும் வகையில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் நிதியுதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத் தொகையும் ரொக்கமாக வழங்கப்படும்.

தையல் எந்திரம்

மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் புரிந்து வாழ்வில் முன்னேறுவதற்கு தையல் எந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பினை 45-ல் இருந்து 60 ஆக நீட்டித்து ரூ.1.48 கோடி செலவில் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 2100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயனடைவர்.

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக முதற்கட்டமாக, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.1 கோடி செலவில் 75 நபர்கள் பயன்பெறும் வகையில் 3 சிறப்பு இல்லங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உணவூட்டு மானியம் உயர்வு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்கள், சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உணவூட்டு மானியம் ரூ.900-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி ரூ.3.92 கோடி கூடுதல் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோருக்கான நடுநிலைப் பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாகவும், விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 2 செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் ரூ.1.15 கோடி செலவில் 128 மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தரம் உயர்த்தப்படும்.

தள்ளுவண்டி கடை

மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் மாவட்ட கலெக்டர் கூட்டம் நடத்தும் பொழுதும் முக்கிய நிகழ்வுகளின் பொழுதும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில் சைகை மொழிப்பெயர்ப்பாளர் வசதி மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து தரப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-ல் வலியுறுத்தப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீட்டினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணி நியமனம் செய்வதை கண்காணிக்கும் பொருட்டு உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

வீட்டுமனை பட்டா

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும். கிராமங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் வீடு வழங்க கோரியும், நகரங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்கக் கோரியும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தன்னார்வ தொண்டு நிறுவனம்

அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 8 இல்லங்கள் திருநெல்வேலி, சேலம், திருச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ரூ.91.72 லட்சம் செலவில் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் பெறும் வயது 50-ல் இருந்து 40 ஆக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்