கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்து வருகிறது.
சென்னை,
கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், தக்காளியின் வரத்து குறைந்தால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததையடுத்து தக்காளி விலை படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த திடீர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக தற்போது கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது.
மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.29-க்கும், மார்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.35-க்கும் விற்கப்படுகிறது. தக்காளி வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.