லூர்து அன்னை ஆலயத்தின் 145-வது ஆண்டு பெருவிழா

வில்லியனூர் லூர்து அன்னை ஆலயத்தின் 145-வது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2022-04-21 16:34 GMT
வில்லியனூர் லூர்து அன்னை ஆலயத்தின் 145-வது ஆண்டு பெருவிழா  சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதுகுறித்து வில்லியனூர் லூர்து   அன்னை  ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

லூர்து அன்னை ஆலய பெருவிழா

வில்லியனூரில்    உள்ள மிகவும் பிரசித்திபெற்ற தூய லூர்து அன்னையின் 145-வது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை காலை கொடிேயற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் நாளை காலை 5.30 மணிக்கு திருத்தல வளாகத்தில் உள்ள அருள்நிலை ஆலயத்தில் சென்னை-மயிலை மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற உள்ளது. நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலியும், சிறிய தேர்ப்பவனியும் நடைபெறும்.
விழாவில் வருகிற 30-ந் தேதி காலை 6 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் சவரிமுத்து ஆரோக்கியராஜ் தலைமையில் திருவிழா திருப்பலியும், அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி காலை 7.30 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் திருப்பலியும், காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமையில் திருப்பலியும் நடைபெற உள்ளது.

ஆடம்பர தேர்பவனி

விழாவில் அன்று மாலை 6 மணிக்கு புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருவிழா திருப்பலியும் அன்று இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர் பவனியும் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அன்னையின் சொரூபத்திற்கு வைரகிரீடம் அணிவிக்கப்படும்.
2-ந் தேதி காலை திருப்பலியும், தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்