மச்சானை பார்த்தீங்களா...!காணாமல் போன கணவரை ஆட்டோவில் ஊர் ஊராக தேடி அலையும் மனைவி
கணவனை காணாமல் ஆட்டோ வைத்து கொண்டு, மனைவி தேடி கொண்டிருக்கிறார்.இந்த பெண்ணின் சோகம் காண்போரை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.
சேலம்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், காணாமல் போன தனது கணவரை கண்டுபிடிக்க, ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்தும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும், இவரது மனைவி ஊர் ஊராக சென்று தேடி வருகிறார். இந்த பெண் கண்ணீர் மல்க கணவரைத் தேடி அலையது இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கேட் பகுதியைச்சேர்ந்தவர் சிவராமன் (45). இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்து வந்தார். இதில் குறைந்த வருவாயே கிடைத்து வந்த நிலையிலும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகுந்த பாசத்தோடு இருந்து வந்தார். இதற்கிடையே இவருக்கு சிறிது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஏப்.7ந் தேதி காலை முத்தம்பட்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து வாழப்பாடிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. தனது கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த இவரது மனைவி பழனியம்மாள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். காணாமல் போன தனது கணவர் சிவராமனை கண்டுபிடித்து தரும்படி வாழப்பாடி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், சிவராமன் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
எனவே, காணாமல் போன தனது கணவரை கண்டுபிடிக்க, ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும், கூலித்தொழிலாளி பழனியம்மாள் தேடியலைந்து வருகிறார்.
பழனியம்மாள், தனியொரு பெண்ணாக ஊர் ஊராக ஆட்டோவில் சென்று, காணாமல் போன தனது கணவரின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, ஒரு வாரத்திற்கு மேலாக சரியாக உணவு கூட உண்ணாமல், கண்ணீர் மல்க பொதுமக்களிடம் காண்பித்து தேடி வருவது இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்களது கணவர் பத்திரமாக வீடு திரும்பிட பிரார்த்தனை செய்வதாகவும், இவரைப்பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரியப்படுத்துவதாகவும், பொதுமக்கள் பலர் இந்த பெண்ணிற்கு நம்பிக்கையும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.