மணமேடு கிராமத்துக்கு பஸ் போக்குவரத்து துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்
மணமேடு கிராமத்துக்கு பஸ் போக்குவரத்தை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்
நெட்டப்பாக்கம்
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மணமேடு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளாக பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் புதுச்சேரிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து மணமேடு கிராமத்துக்கு பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்க வேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ.வும், துணை சபாநாயகருமான ராஜவேலு, பி.ஆர்.டி.சி. இயக்குனரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அந்த கிராமத்துக்கு 3 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த பஸ்கள் கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர் வழியாகவும், நெட்டப்பாக்கம் கல்மண்டபம் வழியாகவும், கரியமாணிக்கம், மதகடிப்பட்டு வழியாகவும் புதுச்சேரிக்கு இயக்கப்படுகிறது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு கலந்துகொண்டு கரிக்கலாம்பாக்கம் வழித்தடத்தில் செல்லும் பஸ்சை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிராம மக்கள், பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் கலந்து கொண்டனர்.