பேரூராட்சி பொது நிதியில் இருந்து நிர்வாக அனுமதி வழங்குவதற்கான உச்ச வரம்பு உயர்த்தப்படும் முதல்-அமைச்சர் அறிவிப்பு

பேரூராட்சி பொது நிதியில் இருந்து நிர்வாக அனுமதி வழங்குவதற்கான உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2022-04-18 23:47 GMT
சென்னை,

பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.

இதையொட்டி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்து. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

மிகப்பெரிய சாதனை

பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி நிறைவு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கோட்டையில் நாங்கள் உட்கார்ந்து கொண்டு என்னதான் திட்டங்களை தீட்டினாலும், அந்த திட்டங்கள் வெற்றி பெறவேண்டும் என்றால், அதை மக்களுடைய உள்ளத்தில், மக்களுடைய கையில் கொண்டுபோய் சேர்க்கவேண்டுமென்றால் அது உங்களால் தான் முடியும். அந்த பொறுப்பும், கடமையும் உங்களுக்கு இருக்கிறது. உங்களை நம்பி அரசினுடைய திட்டங்களை ஒப்படைத்திருக்கிறோம்.

எப்போதெல்லாம் ஜனநாயகம் அல்லது மக்களாட்சி தத்துவத்துக்கு ஊறு விளைகிறதோ, அப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சி அதை சரிசெய்வதோடு, களத்திலே உங்களில் ஒருவராய் நிச்சயம் நிற்கும். உள்ளாட்சி தேர்தல்களை கூட முறையாக நடத்துவது என்பது ஜனநாயகம். இப்போது கூட எந்தவித குறைபாடு, முறைகேடு இல்லாமல், எந்தவித புகார் இல்லாமல், எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம் என்பது வரலாற்றிலே பதிவாகியிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய சாதனை.

உச்ச வரம்பு உயர்த்தப்படும்

பேரூராட்சியினுடைய பொது நிதியில் இருந்து நிர்வாக அனுமதி வழங்குவதற்கான உச்ச வரம்பை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். பணிகளை விரைவாக செயல்படுத்திடும் வகையில் உச்சவரம்பு, இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் ஆகவும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பேரூராட்சிகளுக்கு ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் ஆகவும், உதவி இயக்குனர் அளவிலே ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சம் ஆகவும், மாவட்ட கலெக்டருக்கு ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் ஆகவும் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் தலைவர்கள் உரிய மதிப்பூதியம் வழங்குவது குறித்தும் இந்த அமைப்புகளின் நிதி நிலையை ஆராய்ந்து உரிய ஆணைகளை அரசு விரைவில் வெளியிட இருக்கிறது. அதே நேரத்தில் திட்டங்களை முறையாக செயல்படுத்துவது உங்களுடைய கடமை. நிதிகள் முறையாக செலவு செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது மிகமிக முக்கியமான கடமையாக கருதவேண்டும்.

தமிழக அரசுக்கு நீங்கள் நல்ல பெயரை பெற்றுத்தர வேண்டும். அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘மஞ்சப்பை திட்டம்’ தங்களது எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு பேரூராட்சி பகுதியிலும் தீவிரமாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தி வெளிப்படையான, திறமையான நிர்வாகம் அமைந்திட உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெருமை சேர்த்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயலாற்ற வேண்டும்.

திராவிட மாடல் வளர்ச்சி

என்ன செய்கிறோம் என்பதை விட எப்படி செய்கிறோம் என்பதே முக்கியம். எவ்வளவு நாட்கள் பதவியில் இருந்தோம் என்பதை விட அந்த பதவியில் என்னென்ன காரியங்களை செய்திருக்கிறோம் என்பதை நீங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி, அந்த வளர்ச்சி என்பது திராவிட மாடல் வளர்ச்சியாக தமிழக அரசு முன்மொழிந்து செயல்பட்டு வருகிறது. இத்தகைய ‘திராவிட மாடல்' வளர்ச்சியை ஒவ்வொரு பேரூராட்சியும் அடையவேண்டும். ஒவ்வொரு பேரூராட்சியும், மாதிரி பேரூராட்சி என்று சொல்லத்தக்க வகையில் அமையவேண்டும். நீங்கள் தான் அதனை நடத்திக்காட்ட வேண்டும். கனவுகளைச் செயல்படுத்தும் பேரூராட்சியாக மாற்றி காட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச்செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகளின் கமிஷனர் செல்வராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்