நெல்லையில் விஷம் கொடுத்து மகளை கொன்று செவிலியர் தற்கொலை
நெல்லையில் மகளுக்கு விஷம் கொடுத்து, தானும் குடித்த செவிலியர் என 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு, சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. காற்றாலை என்ஜினீயர். இவருடைய மனைவி சுமதி (வயது 38). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாடசாமி பணிக்கு சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பிய போது சுமதி மற்றும் இளைய மகள் சுப ராஜேசுவரி (8) ஆகிய 2 பேரும் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாடசாமி தனது மனைவி மற்றும் மகளை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இரவு சிறுமி சுப ராஜேசுவரி இறந்தாள். மேலும் இன்று அதிகாலை சுமதியும் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினார்கள். இதில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த சுமதி, 2 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்திருந்தார்.
அதில் மூத்த மகள் விஷம் குடிக்காமல் வெளியே ஓடி தப்பி விட்டது. இதையடுத்து சுமதி, இளைய மகள் சுபா ராஜேசுவரிக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார், சுமதியின் கணவர் மாடசாமி மற்றும் குடும்பத்தினரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.