முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார் ஆந்திர மந்திரி ரோஜா பேட்டி

தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நன்றாக இருக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார் என்று ஆந்திர மாநில மந்திரியும், நடிகையுமான ரோஜா கூறினார்.

Update: 2022-04-17 18:55 GMT
திருவண்ணாமலை,

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியும், நடிகையுமான ரோஜா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார்.

முன்னதாக ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார்

ஆந்திராவில் நான் மந்திரியாக பொறுப்பேற்றதற்கு ஆந்திர மக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்களோ, தமிழக மக்களும் அதே மகிழ்ச்சியோடு என்னை வரவேற்கின்றனர். ஆந்திரா தனது அம்மா வீடு, தமிழ்நாடு தனது மாமியார் வீடு என 2 பேர் ஆசீர்வாதமும் எனக்கு உள்ளது.

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தங்கைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து என்னை அமைச்சரவையில் இடம்பெற வைத்துள்ளார். அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும் வகையில் பணியாற்றுவேன்.

தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நன்றாக இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதியாகவும், திறமையாகவும், மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார். தற்போது படிக்கும் இளைஞர்கள் அனைவரும் இந்திய அளவில் அல்ல, உலக அளவில் சென்று நல்ல இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால், அந்தந்த மாநில தாய்மொழி மட்டும் தெரிந்தால் போதாது. தாய் மொழியோடு சேர்த்து ஆங்கிலம், இந்தி மிகவும் முக்கியம். ஆனால், இந்தியை படிக்க சொல்லி கட்டாயப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்