திருச்சி: போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் நகைகள் அபேஸ்
திருச்சியில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் போலீஸ் போல் நடித்து நகைகளை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி கே.கே.நகர் இந்திராநகரை சேர்ந்தவர் பீட்டர். இவருடைய மனைவி எலிசபெத்பீட்டர்(வயது 67). இவர் நேற்று மாலை அதேபகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை 2 பேர் வழிமறித்தனர்.
அவர்கள் தங்களை போலீஸ் எனக்கூறி கொண்டு எலிசபெத்திடம், இவ்வளவு நகைகளை போட்டு கொண்டு ஏன்? வெளியே வருகிறீர்கள். திருடர்கள் கண்டால் பறித்து சென்றுவிடுவார்கள் என்று கூறினர்.
மேலும், அவரிடம் இருந்த 4 பவுன் நகைகளை கழட்டி வாங்கி அவருடைய பர்சில் வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். எலிசபெத்தும் வீடு திரும்பியவுடன் நகைகளை பீரோவில் வைப்பதற்காக பர்சை திறந்து பார்த்தார். அப்போது நகைகள் மாயமாகி இருந்தன.
தன்னை ஏமாற்றியதை உணர்ந்த அவர் இது குறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரித்தார். இதையடுத்து போலீஸ் போல் நடித்து கைவரிசை காட்டிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.