தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கடந்த 4 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்து சென்றாலும், மார்ச், ஏப்ரல் மே ஆகிய கோடை விடுமுறையின் போது அதிகளவு வர ஆர்வம் காட்டுவார்கள். கடந்த மாதமே கோடை சீசன் தொடங்கி விட்டாலும் இதுவரை எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகள் வராமல் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 14-ந் தமிழ் புத்தாண்டு, 15-ந் தேதி புனிதவெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் பொதுமக்கள் ஊட்டியில் குவிந்தனர்.
இதன் காரணமாக லவ்டேல் சந்திப்பு, சேரிங்கிராஸ் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் பைக்காரா படகு இல்லம், ரோஜா பூங்கா உள்பட பல இடங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.
இதில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலர் செடிகளை கண்டு ரசித்தும், புல்தரையில் அமர்ந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கொரோனா பாதிப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகளில் கடந்த 2 வருடங்களாக வியாபாரம் மந்தமாக இருந்த நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் சிறப்பாக வியாபாரம் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் சுற்றுலா வாகன டிரைவர்களும் ஆனந்தம் அடைந்தனர்.
இதேபோல் வரும் நாட்களிலும் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.