சசிகலாவை அரசியலில் இருந்து ஒதுங்க கூறியது ஏன்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசுகிறார்.

Update: 2022-04-16 23:06 GMT
அவர் தனது பேட்டியில், சசிகலா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் அ.தி.மு.க.வில் இருந்து அவரை நீக்கியது செல்லும் என்று கூறப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மக்கள் சக்தி இல்லாத அவர், இனியும் அரசியலில் ஈடுபடாமல் அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி ஒதுங்கி இருப்பதே அவருக்கு நல்லது என்றும் அறிவுறுத்தி உள்ளார். எந்த வழக்கு போட்டாலும் எத்தகைய போராட்டம் நடத்தினாலும் மக்களும் நியாயமும் தங்கள் பக்கம் இருப்பதால், அவரால் இனி வெல்லவே முடியாது என்பதால்தான் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பது நல்லது என்று தான் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அவர் இதுகுறித்து தொடர்ந்து பேசுகையில், ‘சசிகலாவுக்கு கூடும் கூட்டம் பணம் கொடுத்து கூட்டப்படும் கூட்டம், தொண்டர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிய அவர், கட்சிக்குள் எந்த குழப்பமோ, பிளவோ இல்லை. இரட்டை தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்றும் சிலர் பரபரப்புக்காக பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்துக்கு தேவை திராவிட மாடலா? ராம ராஜ்யமா?, தேநீர் விருந்து பற்றி மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் சரியா? உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு விளக்கமாக அவர் பதில் அளித்துள்ளார்.


மேலும் செய்திகள்