தி.மு.க.-பா.ஜனதாவினர் இடையே மோதல்; கல்வீசி தாக்கியதில் பெண் நிர்வாகி காயம்

அறந்தாங்கியில் தி.மு.க.-பா.ஜனதாவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கல்வீசி தாக்கியதில் பெண் நிர்வாகி காயம் அடைந்தார். இதையடுத்து, 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-16 18:29 GMT
அறந்தாங்கி, 
அவதூறு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழக முதல்-அமைச்சரின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் வ.உ.சி. திடலில் பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொள்வதற்காக அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை நாஞ்சில் சம்பத் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 
கல்வீசி தாக்குதல்
இந்தநிலையில் நாஞ்சில் சம்பத் தங்கியிருந்த விடுதி முன்பு அறந்தாங்கி பா.ஜனதா நிர்வாகிகள் நேற்று இரவு 8 மணியளவில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க.வினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தி.மு.க.வினரும், பா.ஜனதாவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்தநிலையில் பா.ஜனதாவினருக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்ெகாண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ் மறியல்
இதில் பா.ஜனதா மாவட்ட நிர்வாகி உமாமகேஷ்வரி நெற்றியில் கல் தாக்கியதில் காயம் அடைந்தார். பின்னர் அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே நாஞ்சில் சம்பத் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார்.
இந்தநிலையில் கல்வீசி தாக்குதல் நடத்திய தி.மு.க.வினரை கைது செய்யக்கோரி பா.ஜனதாவினர் புதுக்கோட்டை சாலையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பா.ஜனதா நிர்வாகிகள் தி.மு.க.வினரை கைது செய்யும் வரை அங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
25 பேர் கைது
இதையடுத்து புதுக்கோட்டையில் இருந்து அதிவிரைவு போலீசார் வாகனம் மூலம் வரவழைக்கப்பட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 25 பேரை அறந்தாங்கி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்