கஞ்சா விற்ற 5 பேர் கைது

புதுவையில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-16 17:47 GMT
கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் திலாசுப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் சந்தேகம்படியாக நின்ற 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், கதிர்காமம் கங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 27), கோரிமேடு குருநகரை சேர்ந்த பிரகாஷ் (29), கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்த ஜெரோல்ட் (22), கோட்டக்குப்பம் முதலியார்சாவடியை சேர்ந்த மணிகண்டன் (19), பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த ஜோசப் பாஸ்கர் (19) ஆகியோர் என்பதும், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 270 கிராம் கஞ்சா பொட்டல்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்