நெல்லை: களக்காட்டில் கரடிகள் அட்டகாசத்தால் வாழைகள் சேதம் - விவசாயிகள் கவலை....!

களக்காட்டில் கரடிகள் அட்டகாசத்தால் வாழைகள் சேதம் அடைந்து உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-04-16 11:15 GMT
களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பகுதியில் சமீபகாலமாக 10-க்கும் மேற்பட்ட கரடிகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை அழித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

இதனை தடுக்க விவசாயிகள் விடிய, விடிய விளைநிலங்களில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பூலாங்குளம் பத்தில் கரடிகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. 

இன்று அதிகாலையில் கரடிகள் மீண்டும் கீழவடகரையை சேர்ந்த விவசாயி கணேசனுக்கு (50) சொந்தமான விளை நிலங்களுக்குள் நுழைந்து 10-க்கும் மேற்பட்ட வாழைகளை சாய்த்து, வாழைக்காய்களை தின்று தீர்த்து நாசம் செய்துள்ளது. கரடிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கடும் பீதி அடைந்துள்ளனர். 

கரடி நடமாட்டத்தால் விவசாயிகளின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும் கரடிகளிடமிருந்து வாழை உள்ளிட்ட பயிர்களை காப்பாற்ற முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுபற்றி வனத்துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை  எடுக்க வில்லை என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்