குளியல் அறையில் உள்ள இரும்பு பைப்பில் ஈரத்துணியை காயப்போட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...!
ஈரோடு அருகே குளியல் அறையில் உள்ள இரும்பு பைப்பில் ஈரத்துணியை காயப்போட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளார்.
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த பெரிய கொடிவேரி பகுதியில் வசித்து வருபவர் வெள்ளியங்கிரி மகன் கார்த்திக் ராஜா (வயது 24). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள பைனான்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை கார்த்திக்ராஜா வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்று உள்ளார். அப்போது குளியல் அறையில் உள்ள ஒரு இரும்பு பைப்பில் ஈரத்துணிகளை காயபப்போட்டு உள்ளார்.
அந்த இரும்பு பைப்பில் பாய்ந்த மின்சாரம் கார்த்திக் ராஜாவை தாக்கி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை பெற்றோர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் கார்த்திக் ராஜாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த பங்களாப்புதூர் போலீசார் உயிரிழந்த கார்த்திக்ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.