இளம்பெண்ணிடம் சங்கிலி பறிப்பு கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

கிழக்கு தாம்பரத்தில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-04-15 22:48 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் செந்தமிழ் சேதுப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மனைவி சுதா(வயது 29). இவர், நேற்று மாலை வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

மகாலட்சுமி தெருவில் வரும்போது எதிரே இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் வந்தனர். சுதா, தனியாக நடந்து செல்வதை கண்டதும், இருசக்கர வாகனத்தில் இருந்த 2 பேர் மட்டும் கீழே இறங்கி தெருவில் நடந்துவருவது போல வந்தனர்.

சுதா அருகில் வந்ததும் திடீரென அவர்களில் ஒருவன், சுதா கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்து விட்டு, 3 பேரும் மோட்டார்சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா, திருடன் திருடன் என கூச்சலிட்டபடி ஓடியும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சங்கிலி பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவத்தை வைத்து அவர்களை சேலையூர் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்