கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு

கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-04-15 18:53 GMT
சென்னை,

ஏசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த தவக்காலத்தின் கடைசி வாரம், புனித வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த வாரத்தில் பெரிய வியாழனன்று ஏசு கிறிஸ்து சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவுப்படுத்தும் வகையில், கத்தோலிக்க தேவாலயங்களில் பாதிரியார்கள் சாதாரண மக்களின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சியும், சிறப்பு ஆராதனையும் நடைபெறும். அந்தவகையில் நேற்று முன்தினம் அந்த நிகழ்வுகள் நடந்தன.

அதனைத்தொடர்ந்து ஏசு சிலுவையில் அறையப்பட்டது மற்றும் அவர் சிலுவையில் அனுபவித்த பாடுகளை எடுத்துக்கூறும் நிகழ்வாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு ஆராதனை நேற்று நடைபெற்றது.

சிறப்பு வழிபாடு

மேலும் ஏசுவின் சிலுவைப்பாடுகளை சித்தரிக்கும் விதமாக, சிலுவைப்பாதை நிகழ்வுகளும் தேவாலய வளாகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நடத்தப்பட்டு, பின்னர் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிலுவையில் அறையப்பட்ட பிறகு, ஏசுவின் உடலை சித்தரிக்கும் வகையில் சில தேவாலயங்களில் அவரின் சொரூபத்தை வைத்திருந்ததையும் பார்க்க முடிந்தது. அந்த சொரூபத்தை கிறிஸ்தவர்கள் கண்ணீரோடு முத்தமிட்ட நிகழ்வுகளும் நடந்தது. ஏசு சிலுவையில் அறையப்பட்டதில் இருந்து 3-வது நாள் அவர் உயிர்த்தெழுந்தார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) உயிர்த்தெழுதல் பண்டிகை அல்லது ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் அதிகாலையில் இருந்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடைபெறும்.


மேலும் செய்திகள்