பச்சைவாழியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கன்னியகோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
புதுவை-கடலூர் சாலையில் கன்னியகோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி கடந்த 14-ந் தேதி மாலை மங்கள பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான நேற்று காலை கோ பூஜையுடன் 2-ம்கால பூஜைகள் நடந்தன.
பின்னர் காலை 9.45 மணி அளவில் கடம் புறப்பட்டு 10 மணி அளவில் உற்சவமூர்த்தி, வடக்கு ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பாகூர், கன்னியகோவில் உள்பட சுற்றுப் பகுதியை சேர்ந்த கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை, இரவில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மன்னாதீஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவர் தனசேகரன், செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் ஜீவகணேஷ், உறுப்பினர் கனகராஜ் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.