கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

பெரிய வியாழனையொட்டி ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-04-14 16:00 GMT
பெரிய வியாழனையொட்டி ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. 

பாதம் கழுவும் நிகழ்ச்சி

இயேசு சிலுவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பது வழக்கம். 
அதன்படி கடந்த (மார்ச்) மாதம் 2-ந் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. இதனையடுத்து ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ணும் நோன்பை கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 10-ந் தேதி குருத்தோலை பவனி நடந்தது.

காரைக்கால்

இந்த நிலையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வியாழன் கடைபிடிக்கப்பட்டது. இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவுகூறும் வகையில், காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ள பழமையான புனித தேற்றரவு அன்னை ஆலயம் சார்பில் காரைக்கால் நிர்மலாராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி புனித தேற்றரவு அன்னை ஆலயம் பங்குத்தந்தை அந்தோணிலூர்துராஜ் அடிகளார், 12 பங்கு மக்களின் கால்களை, தண்ணீரால் கழுவி, துணியால் துடைத்து முத்தமிட்டார். இதேபோல், காரைக்கால் கோட்டுச்சேரி, நெடுங்காடு, திரு-பட்டினம் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி

புதுச்சேரி ரெயில் நிலையம் எதிரே உள்ள இருதய ஆண்டவர் தேவாலயம், ஜென்மராக்கினி தேவாலயம், புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம் உள்பட புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனை நடந்தது.

சிலுவைப்பாதை

நாளை வெள்ளிக்கிழமை பெரிய சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்