கும்பக்கரை அருவியில் குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவித்து உள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானலில் மழை பெய்யும் பொழுது அருவியில் நீர் வரத்து இருக்கும்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானல், வெள்ளகவி, அடுக்கம் உள்ளிட்ட மலை கிராமங்களில் பெய்து வரும் தொடர் மழையால் அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்தனர்.
தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க, சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.