மேயர் பதவியை பொறுப்பாக நினைத்து பணியாற்ற வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

எனக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியது போன்று மேயர் பதவியை பொறுப்பாக எண்ணி பணியாற்ற வேண்டும் என்று பயிற்சி முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

Update: 2022-04-14 00:06 GMT
சென்னை,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மேலும் அவர் பயிற்சி கையேட்டை வெளியிட்டார்.

இதனை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மு.க.ஸ்டாலின்

மாலையில் பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மேயர் பதவி அல்ல, பொறுப்பு

உள்ளாட்சி அமைப்புகளும், அதன் பிரதிநிதிகளாகிய நீங்களும் மக்களாட்சியின் மகத்துவமான நம்பிக்கை. நீங்கள் முறையாக செயல்பட்டால் மக்களாட்சியின் தத்துவம் மகத்தான வளர்ச்சி பெறும். உங்கள் கைகளில் உள்ளாட்சியின் எதிர்காலம் அடங்கியுள்ளது. எனவே இதை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைக்க வேண்டும்.

1996-ம் ஆண்டு சென்னை மேயராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக நான் பதவியேற்றேன். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதே இதற்கு முன்பு மேயர்களின் நடவடிக்கையாக இருந்தது. அதை நான் மாற்றினேன். மக்களோடு மக்களாக இருந்தால்தான் பெருமை என்ற நிலையில், அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினேன்.

மேயராக பொறுப்பேற்று மாநகராட்சி கூட்டத்தில் முதல் கன்னிப்பேச்சை பேசும்போது, ஒரு குறிப்பை தயாரித்து கருணாநிதியிடம் காட்டினேன். அந்த குறிப்பில் 2 இடங்களில் மேயர் பதவி என்ற இடத்தில் மேயர் பொறுப்பு என்று திருத்தம் செய்தார். இது பதவி அல்ல, பொறுப்பு என்று எடுத்து சொன்னார். அதைத்தான் நானும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இதை பொறுப்பு என்று நினைத்தால்தான் பொறுப்பாக பணியாற்ற முடியும். எனது அரசியல் அடிச்சுவடி மேயர்தான்.

உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகமும், மாமன்றத்தின் நடவடிக்கைகளும் சிறந்து விளங்கிட மாநகராட்சியின் சட்டங்களையும், விதிமுறைகளையும் மேயர்கள் அறிந்திருப்பது அவசியம். நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளான பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்வாய்கள், மேம்படுத்தப்பட்ட சாலைகள், பஸ் நிறுத்தங்கள், திடக்கழிவு மேலாண்மை, குடிசை பகுதிகளை மேம்படுத்துதல், ஏழைகள் வாழ்வதற்கு வீடுகளை கட்டி கொடுத்தல், சாலையோர வியாபாரிகளின் நலன் காத்தல், வீடு இல்லாதவர்களுக்கு புகழிடம் அமைத்து பராமரித்தல் மற்றும் தனி நபர், சமுதாய கழிப்பிடம் அமைத்தல் என இன்னும் பலவிதமான சேவைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் மக்களுக்கு சரியாக தரப்பட்டிருக்கிறதா? என்று கண்காணிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உங்கள் கையில் இருக்கிறது.

நல்ல பெயரை...

தமிழகத்தின் நிதிநிலை பற்றி உங்களுக்கு தெரியும். எவ்வளவு கடனில் இருக்கிறோம். எவ்வளவு வட்டி கட்டி கொண்டிருக்கிறோம். எனவே நிதி நிலைமைக்கு ஏற்றவாறு அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். அப்படி ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாக செலவு செய்திட வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல், சுற்றுப்புற சூழல் தூய்மையை பேணவும், நகர்ப்புற கட்டமைப்பை மேம்படுத்தவும், நேர்மையான நிர்வாகம் அமைந்திட மாநகராட்சி சட்ட விதிகளுக்கு உட்பட்டு நல்லமுறையில் செயல்படுத்தி தமிழக அரசுக்கு நல்ல பெயரை பெற்று தர வேண்டும்.

தரமான குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், மழைநீர் சேகரிப்பு அமைத்தல், பொது சுகாதாரம் சார்ந்த திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றிற்கு அதிகமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். ‘மக்கள் சேவையில் மாநகராட்சி, நமது சேவையில் நகராட்சி’ என்பதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும். இதனை நீங்கள் செயல்படுத்தி காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன். எனது நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றி தர வேண்டும்.

உங்களுக்கான பொறுப்புகள், கடமைகளை நன்கு உணர்ந்து நீங்கள் சார்ந்திருக்க கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்திடும் வகையில் செயலாற்ற வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி என்ற திராவிட மாடல் ஆட்சியை வழங்கி கொண்டிருக்கிறோம்.

உள்ளாட்சியில்மிகப்பெரிய வெற்றி

உங்களை நம்பிதான் எங்களுடைய திட்டங்களை ஒப்படைத்திருக்கிறோம். நான் மேயராக இருந்தபோது சென்னையில் 10 மேம்பாலங்கள் கட்டினோம். இதுவரை மாநகராட்சி சார்பில் பாலங்கள் கட்டிய வரலாறு இல்லை. நான் மேயராக பொறுப்பேற்ற அடுத்த நாளே சென்னையில் தொடர்ந்து 15 நாட்கள் மழை பெய்தது. முதல்-அமைச்சர் கருணாநிதி அப்போது சென்னை நகரில் ஆய்வு மேற்கொண்டார். ஸ்டாலின் என்றைக்கு மேயராக வந்தானோ, அப்போதில் இருந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது என்றார். அதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

இப்போது நாம் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா சூழலுடன் தொடர் மழையும் மிரட்டியது. அப்போது மாநகராட்சி நிர்வாகத்துக்கான கமிஷனராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். அன்று முதல் இப்போது வரை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. ஆட்சிக்கு வந்து 11 மாதங்களில் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம் என்றால், இந்த ஆட்சியின் சாதனைகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று அர்த்தம். அந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் நமது பணி அமைந்திட வேண்டும். அப்படி பணியாற்ற உறுதி எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த கூட்டம் பயன்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்

நிகழ்ச்சியில் தலைமைச்செயலாளர் இறையன்பு, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்