"பேருந்துகளில் கூடுதலாக வசூலித்த கட்டணங்கள் திருப்பி கொடுக்க நடவடிக்கை" - அமைச்சர் சிவசங்கர்
தனியார் பேருந்துகளில் கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
சென்னை,
தனியார் ஆம்னி பேருந்துகள், 4 நாட்கள் தொடர் விடுமுறையை பயன்படுத்தி கட்டண விலையை மும்மடங்கு வரை அதிகரித்து வசூலித்துள்ளனர். குறிப்பாக, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்வதற்கு தனியார் பேருந்துகள் ரூ.2500, ரூ.3000 என்று இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கட்டணம் வசூல் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், தனியார் ஆம்னி பேருந்துகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு பேருந்துகளிலும் ஏறி பயணிகளிடம் டிக்கெட் விலை குறித்து கேட்டறிந்தார். அதிக கட்டணம் வசூல் செய்த பேருந்துகளிடம் இருந்து பணத்தை திரும்ப வாங்கி பயணிகளிடம் கொடுத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக கண்டறியப்பட்ட பேருந்துகள், அதில் முன்பதிவு செய்த பயணிகளின் வசதிக்காக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகமாக வசூல் செய்த கட்டணத்தை பயணிகளிடம் உடனடியாக திருப்பி அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.