பக்தர்கள் விட்டுச்செல்லும் ஆடைகளை வாரம் ஒரு முறை ஏலம் விட முடிவு
திருநள்ளாறு நளன்குளத்தில் பக்தர்கள் விட்டுச்செல்லும் ஆடைகளை வாரம் ஒரு முறை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறு நளன்குளத்தில் பக்தர்கள் விட்டுச்செல்லும் ஆடைகளை வாரம் ஒரு முறை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சனீஸ்வரர் கோவில்
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணகான பக்தர்களும் வருகை தருவார்கள்.
அவ்வாறு வருகை தரும் பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன்குளத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் ஆடைகளை குளத்தின் கரையில் விட்டுச்செல்வது வாடிக்கை. பலர் குளத்தின் உள்ளேயே ஆடைகளை வீசி செல்வதால் பக்தர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது.
வாரம் ஒரு முறை ஏலம்
இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் விட்டுச்செல்லும் ஆடைகளை எடுத்து ஆண்டுதோறும், கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏலம் விடப்படும். இந்நிலையில் ஏலம்விடும் நடைமுறையை கோவில் நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது.
இதுதொடர்பாக, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-கொரோனா பொது முடக்கத்தால், நளன் தீர்த்தக்குளத்தில் பக்தர்கள் புனித நீராடுவது தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்பட்டனர். அதனால், ஓராண்டுக்கு தனியாருக்கு ஏலம் விடும் நடைமுறையில் இருந்து மாறி, வாரந்தோறும் (திங்கட்கிழமை) பக்தர்கள் விட்டுச் செல்லும் ஆடைகளை ஏலம் விடும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
தொட்டியில் போட வேண்டும்
அதன்படி கோவில் நிர்வாகத்தின் மூலம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பக்தர்கள் விட்டுச் சென்ற ஆடைகள் ஏலம் விடப்படுகிறது. இதன்மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.4 லட்சம் வரை கோவில் நிர்வாகத்துக்கு வருவாய் கிடைக்கும்.
குளத்தில் நீராடும் பக்தர்கள் அனைவரும் தங்கள் ஆடைகளை அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தொட்டி அல்லது இரும்பு கூண்டில் போட்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாதம் ஒரு முறை
இந்தநிலையில் பக்தர்கள் விட்டுச்சேல்லும் ஆடைகளை ஏலம் எடுப்போர் கூறுகையில் கடந்த பல ஆண்டுகளாக பக்தர்கள் விட்டுச்செல்லும் ஆடைகளை ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டது.
எந்தெந்த மாதம் எவ்வளவு ஆடைகள் சேரும். எவ்வளவு தொழிலாளர்களை பணிக்கு வைப்பது என ஒரு கணக்கு உண்டு. தற்போது, வாரந்தோறும் ஏலம் விட்டால் குளத்தின் உள்ளே எவ்வளவு ஆடைகள் உள்ளது என்பது தெரியாமல் போய்விடும் அதனால், குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை ஏலம் விட்டால் நன்றாக இருக்கும் என்றனர்.