"அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக அரசை அசைக்க முடியாது" - அமைச்சர் கே.என்.நேரு
அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக அரசை அசைக்க முடியாது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகத்துறைக்கான பயிற்சி முகாமில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உள்ளாட்சி பதவி என்பது மிகவும் முக்கியமான பதவி. மக்களோடு தினமும் காலையில் எழுந்து அவர்களோடு பழகி அவர்களுக்கு தேவையானதை உடனுக்குடன் செயலாற்றி நன்மதிப்பை பெறுகின்ற ஒரு பகுதி. அதில் நீங்கள் சரியாக இருந்தால், சரியாக பணியாற்றினால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக அரசை யாராலும் அசைக்க முடியாது.
அந்தந்த பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்த துறையின் சார்பாக மனு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கின்ற 100 சதவீத மக்களில், 60 சதவீதம் பேர் நகர்ப்புறத்தில் வாழ்ந்து வருகின்றனர். 40 சதவீத மக்கள் கிராமப்புறத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
நீண்ட கால திட்டங்களாக இருக்கின்ற பாதாள சாக்கடை திட்டமும், குடிநீர் வழங்கும் திட்டத்தையும் முதன்மையாக எடுத்து இந்த 3 ஆண்டு காலத்திற்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.